இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (06.12.2023) சிறை பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (7- 12- 2023) கடிதம் எழுதியுள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் IND-TN-10-MM-1061, IND-TN-08-MM-231, IND-TN-08-MM-385 மற்றும் IND-TN-06-MM-707 ஆகிய பதிவு எண் கொண்ட மீன் பிடிப் படகுகளில் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 21 மீனவர்கள் எல்லை தாண்டி மீம்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 6-12- 2023 அன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கவலைப்பட தெரிவித்துள்ளார்.

மீன்பிடி தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி இது போன்று கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களையும் அவர்களது மீன் பிடிப்புப் படகுகளையும் விடுவிப்பதோடு, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும், உடனடியாக விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.