சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய சர்ச்சைக்குரிய தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் சட்டக் கொள்கைகளைத் தாண்டி மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், சிறுமியைத் தகாத முறையில் தொடுவதும், பைஜாமாவை கீழிறக்குவதும் ‘பாலியல் வன்கொடுமைக்கான ஆயத்தம்’ மட்டுமே என்றும், அது ‘வன்புணர்வு முயற்சி’ (Attempt to Rape) அல்ல என்றும் கூறியிருந்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் குற்றவாளிக்குத் தண்டனை குறையும் சூழல் ஏற்பட்டதால், நாடு முழுவதும் இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா எழுதிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது:
“நீதிபதிகளின் தீர்ப்புகள் வெறும் சட்டக் கொள்கைகளை மட்டும் பிரதிபலிக்கக் கூடாது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான இரக்கமும், மனிதாபிமானமும் பொதிந்திருக்க வேண்டும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை அவசியம்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி மீது ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’ என்ற கடுமையான பிரிவின் கீழ் மீண்டும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
மேலும், பாலியல் குற்ற வழக்குகளைக் கையாளும் போது நீதிபதிகள் உணர்வுப்பூர்வமாகச் செயல்படுவதை உறுதி செய்ய, புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க ஒரு நிபுணர் குழுவை அமைக்குமாறு தேசிய நீதித்துறை அகாடமியின் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
