பெங்களூருவில் ஓய்வுபெற்ற இஸ்ரோ (ISRO) அதிகாரி ஒருவர், தனது மனைவியைத் துண்டால் நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தம் காரணமாக இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு பொம்மிஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நாகேஸ்வர ராவ் (65). இவர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (ISRO) பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி சந்தியா ஸ்ரீ.
நேற்று காலை சுமார் 11 மணியளவில், தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சூழலில், நாகேஸ்வர ராவ் தனது மனைவியைச் சமையலறைத் துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
மனைவியைக் கொன்ற பிறகு, சடலத்துடன் வீட்டிற்குள்ளேயே இருந்த நாகேஸ்வர ராவ், நீண்ட நேரத்திற்குப் பிறகு தனது நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறியுள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த சந்தியா ஸ்ரீயின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நாகேஸ்வர ராவ் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அதாவத் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில், நாகேஸ்வர ராவ் கடந்த சில காலமாகத் தீவிர மன அழுத்தத்தினால் (Depression) பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்துள்ளது. மனைவியைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதில் வெளிநபர்கள் யாருக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகியுள்ளது”.
அமெரிக்காவில் வசித்து வரும் இத்தம்பதியினரின் மகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் நாகேஸ்வர ராவின் மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்து, கொலைக்கான அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
