உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டிற்காக, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் (PCB) வீரர்களுக்கு அபராதம் விதித்துள்ள நடவடிக்கையை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா கடுமையாகச் சாடியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த வினோத நடவடிக்கை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள உஸ்மான் கவாஜா கூறியிருப்பதாவது, உலகக்கோப்பை தோல்விக்காக வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை. இதைக் கேட்டபோது எனக்குச் சிரிப்புதான் வந்தது. உலகின் எந்தவொரு உயர்தர விளையாட்டு அமைப்பாவது தோல்விக்காக வீரர்களுக்கு அபராதம் விதிக்குமா? எந்த வீரரும் வேண்டுமென்றே தோற்பதற்காக விளையாடுவதில்லை.
ஏற்கனவே கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிகுந்த மனஅழுத்தத்துடன் விளையாடும் வீரர்களுக்கு, இந்த அபராத நடவடிக்கை கூடுதல் சுமையையே ஏற்படுத்தும். இது அவர்கள் அடுத்த முறை சிறப்பாக விளையாட எவ்விதத்திலும் உதவாது; மாறாக அவர்களுக்கு மனக்கஷ்டத்தையே கொடுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
நடப்பு 2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பயணம் தொடக்கம் முதலே சர்ச்சைகளுடனேயே அமைந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்த அரசின் இழுபறி முடிவுகளுக்குப் பின் களமிறங்கிய பாகிஸ்தான், லீக் சுற்றில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவை வீழ்த்தியது.
இருப்பினும், கொழும்பில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதன்பின் நமீபியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ‘சூப்பர்-8’ சுற்றுக்கு முன்னேறிய போதிலும், இங்கிலாந்திடம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும், இலங்கைக்கு எதிரான போட்டியில் இலக்கைத் தற்காத்துக் கொள்ளத் தவறியதால் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
பாகிஸ்தான் அணியின் இந்த வெளியேற்றத்தை அந்நாட்டின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சித்து வரும் நிலையில், கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள ‘அபராத’ முடிவு சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. மேலும் வீரர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக தண்டனை வழங்கும் இப்போக்கு சரியானதல்ல என்பதே கவாஜா போன்ற மூத்த வீரர்களின் கருத்தாக உள்ளது.
