​டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கண்ட பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், இந்திய அணியைத் தாராளமாகப் பாராட்டியுள்ளார். ‘ஹார்னா மனா ஹை’ என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது முந்தைய கணிப்பு தப்பாகிவிட்டதாக ஒப்புக்கொண்டதோடு, இந்தியா இந்தத் தொடரிலேயே விளையாடாத மிகச்சிறந்த கிரிக்கெட்டை அரையிறுதி எனும் பெரிய மேடையில் விளையாடித் தங்களது திறமையை நிரூபித்துவிட்டதாகப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

​இந்த வெற்றியின் பின்னணியில் அக்ஷர் படேலின் ஃபீல்டிங் மிக முக்கியமானது என அமீர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹாரி ப்ரூக் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோரின் கடினமான கேட்சுகளை அக்ஷர் பிடிக்காமல் இருந்திருந்தால், இங்கிலாந்து ஒரு ஓவர் முன்னதாகவே இலக்கை எட்டியிருக்கும் என அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மேலும், பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர மற்றவர்களின் பந்துவீச்சு சுமாராக இருந்ததாகவும், பும்ராவின் அந்த ‘ஃபேக்டர்’ தான் இந்தியாவிற்குப் பெரிய பலம் என்றும் அவர் கூறியுள்ளார். மார்ச் 8-ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து மோதவுள்ள நிலையில், இந்திய அணியின் திட்டமிடல் கச்சிதமாக இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.