சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் போது, மனித உருவ ரோபோ ஒன்று மாணவி ஒருவரைத் திடீரெனக் கட்டிப்பிடித்த சம்பவம், தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பல்கலைக்கழகத்தின் கலாச்சார விழாவின் போது, மனித உருவ ரோபோக்கள் நடனமாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடன அசைவுகளுக்காக மட்டுமே அந்த ரோபோக்கள் புரோகிராம் செய்யப்பட்டிருந்தன. ஆனால், நடனம் ஆடிக்கொண்டிருந்த ஒரு ரோபோ, திடீரென அருகில் நின்றிருந்த ஒரு மாணவியை நோக்கிச் சென்று, அவரை மிகவும் நெருக்கமாகக் கட்டிப்பிடித்தது.

சற்றும் எதிர்பாராத இந்தச் செயலால் அந்த மாணவியும், அங்கிருந்த ஊழியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக விரைந்து வந்த தொழில்நுட்ப ஊழியர்கள், அந்த ரோபோவை மாணவியிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து இணையவாசிகள் இருவேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். “செயற்கை நுண்ணறிவு (AI) சொந்தமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதற்கான எச்சரிக்கை மணி இது” என்று ஒரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தக் கருத்தை மறுக்கின்றனர். “இது ரோபோவின் உணர்வல்ல, மாறாக அதன் சென்சார்களில்  ஏற்பட்ட பிழை அல்லது மென்பொருள் கோளாறினால் நிகழ்ந்த தவறான செயல்” என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மனித உருவ ரோபோக்கள் இதுபோன்று கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவது இது முதல் முறையல்ல என்று பலரும் கூறுகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம், சீனாவின் மக்காவ் பகுதியில் ரோபோ ஒன்று 70 வயது மூதாட்டியைத் துரத்திச் சென்று பீதியை ஏற்படுத்தியது. இதே ஷான்சி மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்பு, நடனமாடிக் கொண்டிருந்த ரோபோ ஒன்று அருகில் நின்றிருந்த சிறுவனைத் திடீரெனத் அறைந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவங்கள் மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையிலான பாதுகாப்பு விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகக் குளோபல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by 新明日报 (@shinmindailynews)