மேற்கு மாம்பலம், தம்பையா சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வந்த சங்கர் (44) என்பவர், பெயின்டிங் மற்றும் எலக்ட்ரீஷியன் பணிகளில் ஈடுபட்டிருந்தார். கடந்த 1ம் தேதி இரவு, அவரது வீட்டின் அருகே உள்ள பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்.

இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக அசோக் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதே பகுதியில் வசிக்கும் தருண் (23) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த தருண், சங்கரிடம் சிகரெட் வாங்கி வரச் சொல்லியதால், சங்கர் அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த தருண், சங்கரை தள்ளியதில் அவர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.