ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) நடப்புத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியின் அசுர வேக ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். 38 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த சென்னை அணியை, மிடில் ஆர்டரில் சர்பராஸ் கான் (17) மற்றும் கார்த்திக் சர்மா (18) மீட்க முயன்றனர். இறுதியில் ஜேமி ஓவர்டனின் (43) அதிரடியால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்களை எட்டியது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் நந்த்ரே பர்கர் சிறப்பாகப் பந்துவீசினர்.

128 ரன்கள் என்ற இலக்குடன் களம் புகுந்த ராஜஸ்தான் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி – யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை அதிரடித் தொடக்கம் கொடுத்தது. குறிப்பாக, வைபவ் சூர்யவன்ஷி புயலெனப் பாய்ந்து வெறும் 15 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்தார். இது ஐபிஎல் வரலாற்றின் 3-வது அதிவேக அரைசதமாகும்.

ஜெய்ஸ்வால் 38 ரன்களும், வைபவ் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் கேப்டன் ரியான் பராக் (14*) அதிரடியாக ஆடி 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டச் செய்தார். இன்னும் 47 பந்துகள் மீதமிருந்த நிலையில் ராஜஸ்தான் எளிதாக வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், வைபவ்வின் ஆட்டத்தைக் கண்டு தானும் துருவ் ஜூரலும் வாயடைத்துப் போனதாகத் தெரிவித்தார். “வைபவ் இவ்வளவு சிறிய வயதில் எப்படி இப்படி ஆடுகிறார் என்று நாங்கள் வியந்து பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் எங்கள் அணியில் இருப்பது பெருமை. இந்தத் தொடரின் அனைத்து 14 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலும் ஊடகங்கள் என்ன பேசினாலும் கவலைப்படாமல் அவர் தனது இயல்பான ஆட்டத்தைத் தொடர வேண்டும்,” என ஆதரவு தெரிவித்தார்.