மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி ரயில் நிலையத்தில், இன்று (பிப். 09) அதிகாலை குவாலியர் – போபால் இன்டர்சிட்டி ரயிலில் ஏற முயன்ற விஜயலதா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு நேர்ந்த விபத்து காண்போரை உறைய வைத்துள்ளது. தனது கணவருடன் போபால் செல்வதற்காக ரயில் நிலையம் வந்த விஜயலதா, ரயில் மெதுவாக நகரத் தொடங்கிய போது அதில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையேயான குறுகிய இடைவெளியில் விழுந்து நேராகத் தண்டவாளத்தில் விழுந்தார். இதைக் கண்டு அங்கிருந்த பயணிகள் அலறியடிக்க, அங்கிருந்த ஜிஆர்பி போலீஸ் கான்ஸ்டபிள் லலித் குமார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, தண்டவாளத்தில் குதித்துப் பெண்ணைப் பத்திரமாக வெளியே இழுத்தார்.
Shivpuri: Woman Slips Into Gap Between Coach And Platform While Boarding Gwalior-bhopal Intercity Train; Rescued By Grp#trainaccident | #madhyapradesh | #FreePressMP pic.twitter.com/jxWxiEknGJ
— Free Press Madhya Pradesh (@FreePressMP) February 9, 2026
அதே சமயம், ரயிலுக்குள் இருந்த ஜாகிர் என்ற பயணி சமயோசிதமாகச் செயல்பட்டு அவசர காலச் சங்கிலியை (Emergency Chain) இழுத்து ரயிலை நிறுத்தினார். இவர்களின் கூட்டு முயற்சியால் விஜயலதா ஒரு மிகப்பெரிய உயிர்ச் சேதத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பினார். காயமடைந்த அவருக்கு ரயில் நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டி சிகிச்சையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். “ரயில்வே விதிகளை மீறி ஓடும் ரயிலில் ஏற முயல்வது தற்கொலைக்குச் சமம்” என்று எச்சரித்துள்ள போலீசார், பயணிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
