தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்று பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன.
நெல் சேமிப்புக் கிடங்குகள், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முந்தைய திமுக ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக அமைச்சர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அடுத்தடுத்து கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ரமேஷ், “திமுக அரசு அறிவித்த நெல் சேமிப்பு கிடங்குகள் எங்கே?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, “நெல் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படவில்லை என்பது முற்றிலும் தவறான தகவல். திமுக ஆட்சிக் காலத்தில் 18 மாவட்டங்களில் 54 இடங்களில் நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டன. நெல் சேமிப்புக் கிடங்குகள் முறையாகக் கட்டப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன” என விளக்கமளித்தார்.

விவசாயிகள் நலன் குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “புதிய ஆட்சியில் அள்ளித் தருவார்கள் என எதிர்பார்த்த விவசாயிகளுக்குக் கிள்ளித் தான் கொடுத்துள்ளீர்கள். ‘அடுத்த ஜென்மம் வந்தால் விவசாயியாகப் பிறக்க வேண்டும்’ என முதலமைச்சர் கூறியதை நம்பி விவசாயிகள் ஏமாந்து விட்டனர்” என விமர்சித்துப் பேசினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வரலாற்றில் எப்போதாவது கரும்புக்கு டன்னுக்கு ₹4,000 வழங்கப்பட்டது உண்டா? ஆனால், தற்போது முதலமைச்சர் அதைச் செய்து காட்டியுள்ளார். நெல் விலையையும் இருமடங்கு உயர்த்தியுள்ளார். விவசாயிகளை வாழவைக்கும் தலைவராக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை, உங்களுக்குத் தெரியவில்லையா?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, திமுக அரசு “போராட்டம் இல்லாத அரசாங்கமாக” செயல்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “ஜனநாயக முறையில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய பொதுமக்கள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சிய அரசுதான் திமுக அரசு” என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

 

இவ்வாறாக, பல்வேறு துறைகளின் மீதான விவாதங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் காரசாரமான வாதப் பிரதிவாதங்களால் சட்டப்பேரவை வளாகம் நாள் முழுதும் பரபரப்பாகக் காணப்பட்டது.

மேலும் இதற்கிடையில் நீங்கள் படம் பார்த்து வந்தவர்கள் நாங்கள் அப்படியெல்லாம் முரசொலி பார்த்து கொள்கைகளைப் பார்த்து வந்தவர்கள் என்று தமிழக வெற்றிக்கழக அரசை பார்த்து எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார். அதன் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை பார்த்து சாமி அமைச்சர் உண்மையா பொய்யா என தெரியாமல் ரீல்ஸ் கண்டெண்டை அப்படியே எடுத்து விடுகிறார் என்றும் கூறினார். மேலும் அவர் கலகலப்பாக இப்படி பேச அந்த சமயத்தில் சிஎம். விஜய் விழுந்து விழுந்து சிரித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.