ஜப்பானில் தற்போது ‘சவப்பெட்டி தியானம்’ (Coffin Meditation) என்ற ஒரு வினோதமான பழக்கம் மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாக இறந்தவர்களை வைக்கும் சவப்பெட்டிக்குள், உயிரோடு இருக்கும் மனிதர்கள் அமைதி மற்றும் மன நிம்மதிக்காக 30 நிமிடங்கள் வரை படுத்து தியானம் செய்கின்றனர். ஜப்பானில் தற்கொலை எண்ணம் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு மரணம் பற்றிய பயத்தைப் போக்கி வாழ்வின் மதிப்பை உணர்த்த இந்த நூதன முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

​இதற்கென டோக்கியோவில் பிரத்யேக ‘ஸ்பா’ (Spa) மற்றும் இறுதிச்சடங்கு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெறும் 13 டாலர் (சுமார் ₹1,100) கட்டணத்தில், அழகான வண்ணமயமான சவப்பெட்டிகளுக்குள் படுத்துக்கொண்டு இசையைக் கேட்கவோ அல்லது அமைதியாக இருக்கவோ வாய்ப்பு வழங்கப்படுகிறது. “திரும்பி வர முடியாத மரணத்தைத் தழுவும் முன், திரும்பி வரக்கூடிய மரணத்தை ஒருமுறை அனுபவித்துப் பாருங்கள்” என்பதே இந்த வினோத பிசினஸின் தாரக மந்திரமாக உள்ளது. இது பலரது மன அழுத்தத்தைக் குறைத்து, வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது.