மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ருவைஸ் (Ruwais) தொழிற்பேட்டை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான ADNOC-ன் முக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில், ட்ரோன் தாக்கியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாளைக்கு 9,22,000 பேரல் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தாலும், இது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

​கடந்த சில நாட்களாகவே மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 2-ம் தேதி சவுதி அராம்கோ-வின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையமும், மார்ச் 5 மற்றும் 9-ம் தேதிகளில் பஹ்ரைனின் பாப்கோ (Bapco) சுத்திகரிப்பு நிலையமும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகின. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், ஈரானின் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றியுள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இப்படி வரிசையாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் குறிவைக்கப்படுவதால், உலகளவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.