கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மூத்த மகள் சாதனாவுக்கு(13) உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் எனது மகளை கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றேன்.

இதனையடுத்து சாதனாவை பரிசோதனை செய்த டாக்டரிடம் எனது மகளுக்கு சளி பிரச்சனை இருப்பதாக தெரிவித்தேன். இதனால் டாக்டர் எனது மகளை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ஊசி போடவும், மாத்திரை சீட்டும் எழுதி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து செவிலியர் என்னிடமிருந்து சீட்டை வாங்கி கூட பார்க்காமல் எனது மகளுக்கு இரண்டு ஊசி போட்டார்.

எதற்காக இரண்டு ஊசி போடுகிறீர்கள் என கேட்டதற்கு நாய் கடித்தால் இரண்டு ஊசி தான் போட வேண்டும் என கூறினார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்து எனது மகளுக்கு சளி பிரச்சனை தான் எனக் கூறினேன். அதற்கு அலட்சியமாக செவிலியர் பதில் அளித்தார். இதற்கிடையே எனது மகளுக்கு மயக்கம் ஏற்பட்டதால் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் அனுமதித்தேன்.

எனவே அலட்சியமாக சிகிச்சை அளித்த செவிலியர், பணியில் இருந்த டாக்டர், கண்காணிப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செல்லின்பால் செவிலியர் கண்ணையிடம் விசாரணை நடத்தினார். இதனையடுத்து பணியில் கவன குறைவாக செயல்பட்ட கண்ணகியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.