உத்தரபிரதேசம் காஜிபூர் மாவட்டம் ராம்பூர் மஞ்சா பகுதியில், 30 வயதுடைய இல்லத்தரசி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. நிதிச்சுமை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக, அந்த பெண் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு அதிக அளவு மருந்துகளை உட்கொண்டார்.

தனது செயலை வீடியோவாக பதிவு செய்து, அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும், மெட்டா நிறுவனம் அதை உடனடியாக கவனித்து உத்தரபிரதேச காவல்துறையின் இணைய மையத்திற்கு எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பியது.

இந்த தகவலை பெற்ற காவல்துறை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். அதன் அடிப்படையில், சிறுமியின் மொபைல் எண் மூலம் அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டு, வெறும் 8 நிமிடங்களில் துணை ஆய்வாளரும் பெண் காவலரும் அந்த வீட்டில் அடைந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நிலை சீரடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

விசாரணையில் தெரியவந்ததாவது, அந்தப் பெண் சமீபத்தில் குழந்தை பெற்றிருந்தார். மருத்துவச் செலவுக்காக தனது கணவரின் சம்மதத்துடன் ரூ.50,000 கடன் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் கணவர் தவணைகளை செலுத்தினாலும், பின்னர் அவர் தவணைகளை செலுத்தாமல், பெண்ணிடம் பேசுவதையும் நிறுத்தினார். இதனால், நிதிச் சுமை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம், மெட்டா மற்றும் காவல்துறை இணைந்து செயல்பட்டதினால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது என்பதையும், சமூக ஊடகங்களில் மன அழுத்தத்தில் உள்ளவர்கள் வெளியிடும் பதிவுகளை கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளதையும் மீண்டும் ஒரு முறை உணர்த்துகிறது.