கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் ஏற்பட்ட மோதலால் மனமுடைந்த மென்பொருள் பொறியாளர் சுஷ்மா என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் டெல்லில் பணியாற்றி வந்த இவருக்கும், புனீத் குமார் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 4 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில காலமாகவே குடும்பத்தில் சிறு சிறு விஷயங்களுக்காகத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், குறிப்பாகச் சமையல் அறையில் சுஷ்மாவைச் சமைக்க விடாமல் தடுத்து அவரது மாமியார் கல்பனா மனரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மீண்டும் சமையல் தொடர்பாக மாமியாருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் மனமுடைந்த சுஷ்மா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சுஷ்மாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் சுஷ்மாவின் கணவர் புனீத் குமாரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மாமியார் கல்பனாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு சிறிய குடும்பப் பிரச்சனை ஒரு உயிரைப் பறித்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
