மக்களவையில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும்  விழுப்புரம் மக்களவை தொகுதிகளில் களம் காண்கிறது விசிக. இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர், திராவிட முன்னேற்ற கழகத்தின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மற்றும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடைபெற உள்ள இந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

விழுப்புரம் தொகுதியில் வேட்பாளராக மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் மீண்டும் நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன். சிதம்பரம் தொகுதியில் 6வ முறையாக போட்டியிடுகிறேன். இம்முறை என்னை நாடாளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைப்பர் என தெரிவித்தார்.

மேலும் திருமாவளவன் பேசியதாவது, மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். மோடி ஆட்சியில் அதானி, அம்பானி தான் வளர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டு மக்கள் ஒரு புறமும், சங் பரிவார் கும்பல் ஒரு புறமும் நிற்கிறது. மக்களுக்கும், சங் பரிவார் கும்பலுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த தேர்தல். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தை பிடிக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. வடமாநிலம் போன்று தமிழகத்திலும் மதச்சாயம் பூசி வெறுப்பு அரசியல் செய்ய நினைக்கின்றனர். விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளிலும் வெற்றி பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவோம். தேர்தல் முரண்பாடு இருந்தாலும் சமூக நீதி என்ற புள்ளியில் திமுக, அதிமுக ஒரே கருத்தில் இருக்கும்.

தமிழகத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவில் ஒரு அமைதிப் புரட்சி நடக்க உள்ளது. 10 ஆண்டுகளாக வளர்ச்சி பற்றி பாஜக பேசியதே தவிர கண்கூடாக பார்க்கும் வகையில் எதையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் 2வது பெரிய கட்சியாக உருவெடுக்க பாஜக பெரும் முயற்சி எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரு வேறு கட்சியாக இருந்தாலும் சமூகநீதி என்ற புள்ளியில் இணைந்துள்ளனர்.

மின்னணு இயந்திரங்களை வைத்து பாஜக சதி செய்ய முற்படுவதை மக்கள் முறியடிக்க வேண்டும். தன்னுடன் சேரும் காட்சிகளை ஊடுருவி அந்த கட்சிகளை நீர்த்துப்போக செய்வதுதான் பாஜகவின் வேலை. நாட்டின் எல்லாத் துறைகளும் மிக பலவீனமாக இருக்கின்றன. பொருளாதாரத்தில் அதலபாதாளத்தில் சரிந்துள்ளது” என்று கூறினார்.