ஒரு குழந்தைக்கு இந்த உலகிலேயே ஆகச்சிறந்த பாதுகாப்பான புகலிடம் என்பது தாயின் மடியும் தந்தையின் அரவணைப்பும்தான். ஆனால், மகாராஷ்டிராவின் வாசிம் மாவட்டத்தில் வசித்து வந்த மூன்று பிஞ்சு குழந்தைகளுக்கு, தங்களின் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தந்தையே, கண் முன்னே தாயைக் காவு வாங்கிய அரக்கனாக மாறிய கொடூரம் அரங்கேறியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சல்மான்கான் மற்றும் அவரது மனைவி ஹசின் பானு ஆகிய இருவருக்கு இடையே ஏற்பட்ட சந்தேகப் புயல், இன்று அவர்களது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சுடுகாடாக்கியுள்ளது.

கணவன்-மனைவி என்ற புனிதமான பந்தத்திற்குள் எப்போது சந்தேகப் பேய் நுழைகிறதோ, அப்போதே அங்கு அமைதி மறைந்துவிடுகிறது. ஹசின் பானுவின் நடத்தையில் சல்மான்கானுக்கு ஏற்பட்ட வீண் சந்தேகத்தால், அந்தத் தம்பதிக்குள் அடிக்கடி சண்டைகள் வெடித்து வந்துள்ளன. இந்தத் தீராத மோதல்களின் உச்சக்கட்டமாக, நேற்று மாலை தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சல்மான்கான் காரில் சென்று கொண்டிருந்தபோது, மீண்டும் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சல்மான்கான், தன் காரில் வைத்திருந்த இரும்பு கம்பியைக் கொண்டு ஹசின் பானுவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் அந்தத் தாய் அலறியபோது, தங்களின் தாயைக் காப்பாற்ற முடியாமல் அந்த மூன்று குழந்தைகளும் காரின் பின் இருக்கையில் அமர்ந்து கதறி அழுதுள்ளன. ஆனால், அந்த மழலைகளின் அழுகுரல் சல்மானின் காதுகளில் விழவில்லை; வெறி பிடித்தவனாக தன் மனைவியின் கழுத்தை நெரித்துக் குழந்தைகள் கண் முன்னாலேயே கொடூரமாகக் கொலை செய்தார்.

கொலை வெறி அடங்கியதும், தன் மனைவியின் உயிரற்ற உடலோடு காவல் நிலையத்திற்குச் சென்ற சல்மான்கான், தானாகவே சரணடைந்தார். அவர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பெற்ற தாயை மண்ணுக்கும், தந்தையைச் சிறைக்கும் அனுப்பிவிட்டு, தங்குவதற்குக் கூரையும், ஆறுதல் சொல்ல உறவும் இன்றி அந்த மூன்று பிஞ்சு குழந்தைகளும் பரிதவிப்பில் நிற்பது காண்போரின் நெஞ்சைக் கரைய வைப்பதாக உள்ளது.