பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டையில் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், ஒரு பெண் வீதியில் பாதுகாப்பாக நடமாட முடியாத அளவிற்குச் சூழல் சீர்கெட்டுப் போயிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தினந்தோறும் மக்கள் இந்த ஆட்சியைத் திட்டித் தீர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை விட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பற்றித்தான் மக்கள் இன்று அதிகம் தெரிந்து வைத்துள்ளார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

​தொடர்ந்து பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ‘சந்தி சிரிப்பதாக’ விமர்சித்தார். தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அமித் ஷாவின் செயல்பாடுகள் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக அரசு இழந்துவிட்டதாகவும், மாற்றத்தை நோக்கி மக்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும் தனது உரையில் அவர் ஆக்ரோஷமாகப் பதிவு செய்தார்.