திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், தாம் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் திருச்சி கிழக்கைத் துறந்து, பெரம்பூர் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டதால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், தவெக அரசின் ஒரு மாத கால மிகச் சிறந்த செயல்பாடுகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் தவெக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதாகக் சாடினார்.

குறிப்பாக, “முதலமைச்சர் விஜய் மீது உள்ள தனிப்பட்ட பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்கின்றன; வளர்ந்து வரும் தவெக-வை அவர்களுக்குப் பிடிக்காததால் தான் வீண் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்” என்று விளக்கிய அவர், “தவெக-வினரைச் சிலர் தற்குறிகள் என ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் அவர்கள் தற்குறிகள் அல்ல, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தவெகவை அரியணையில் ஏற்றிய, குறிவைத்துத் தாக்கும் அம்புகளாகச் செயல்படுபவர்கள்” என்று விமர்சகர்களுக்கு அதிரடி பதிலடி தந்துள்ளார்.
தமது அரசியல் வருகை மற்றும் அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்துப் பேசிய லாரன்ஸ், பா.ஜ.க-விலிருந்து விலகிப் புதிய கட்சி தொடங்கவுள்ள அண்ணாமலை குறித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.”அண்ணாமலை நன்றாகப் படித்தவர், சிறந்த அரசியல் புரிதல் கொண்டவர்; அவரைப் போன்ற புதியவர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் நல்லதுதான்” என்று குறிப்பிட்ட அவர், அண்ணாமலை உட்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் வரவேற்றார்.

மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பது முதலமைச்சர் விஜய்யின் சிறப்பான, வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுக்கு மக்கள் சில காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தாம் பணம் சம்பாதிக்கவோ அல்லது வெறுப்பு அரசியல் செய்யவோ பொதுவாழ்விற்கு வரவில்லை என்று விளக்கிய அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்துக் கட்சி மூத்த தலைவர்களின் ஆசியோடு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கவிருப்பதாகவும், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த இறுதி முடிவை, விரைவில் தனது ரசிகர்களைத் திரட்டி, அவர்கள் முன்னிலையில் முறைப்படி அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.