பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நேற்று அரசியல் வருகை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் தெருநாய்களை உதாரணமாகக் காட்டிப் பேசினார். லாரன்ஸின் இந்தத் தெருநாய் உதாரணம் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் பொதுமக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிவிட்டார் என்று பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவசர விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “எனது ரசிகர்களும், மக்களும் என் தாய்க்குச் சமமானவர்கள். அப்படிப்பட்ட மக்களை நான் ‘நாய்கள்’ என்று குறிப்பிட்டதாகச் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் பொய்யானது மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தும் செயலாகும். தவெக-வின் தொண்டர்கள் தற்குறிகள் அல்ல, அவர்கள் ‘தவெக-வின் அம்புக்குறி’ என்றுதான் நான் கூறினேன்.
மேலும் எனது இந்தக் கருத்தைச் சூழலுக்குப் புறம்பாகத் திரித்து, தேவையற்ற சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எனவே, முழு வீடியோவையும் பார்த்து நான் என்ன சொல்ல வந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மக்களைத் தவறாக வழிநடத்த முயல்வதால் மட்டுமே இந்த விளக்கத்தை அளிக்கிறேன் என்று லாரன்ஸ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
