மகாராஷ்டிர மாநிலம் யவதமால் மாவட்டத்தில், புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்வி என்ற சிறுமி, கடந்த மே 1-ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சிறுமியின் மரணம் குறித்து எவ்வித மருத்துவப் பரிசோதனையும் செய்யாமல், அவரது உடல் அவசரம் அவசரமாகப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகப் அப்பகுதி மக்களிடையே சந்தேகம் எழுந்தது.

பொதுமக்களின் சந்தேகத்தைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தலையிட்டது. சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் முன்னிலையில் சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மயானத்திலேயே தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், “அஜந்தி பார்த்தி பெடா பகுதியில் கடந்த சில வாரங்களாகக் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தாலும், போதுமான குடிநீர் கிடைக்காததாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அந்தச் சிறுமி உயிரிழந்திருக்கலாம்” என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நிலவும் நிர்வாகச் சீர்கேட்டையும், தண்ணீர் தட்டுப்பாட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஊரக மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் பிரஷிக் போயர் கூறுகையில், சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வக அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் – அது வெப்ப அலை பாதிப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும் என்றார்.

தற்போது இந்த மர்ம மரணம் தொடர்பாகப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக ஒட்டுமொத்த மாவட்டமே காத்திருக்கும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.