சத்தீஸ்கர் மாநிலம் மனேந்திரகர் பகுதியில் திருமணமான இரண்டே நாட்களில் நடந்த ஒரு சினிமா பாணி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 6-ம் தேதி ஒரு இளம்பெண்ணுக்கு கோலாகலமாகத் திருமணம் நடந்துள்ளது. புகுந்த வீட்டிற்குச் சென்ற மணப்பெண்ணுக்கு வரவேற்பு நிகழ்ச்சி (Reception) நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், “நானும் இந்த மணப்பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம், எங்களைப் பிரித்துதான் இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளனர்” என்று கூறி குண்டைத் தூக்கிப் போட்டார்.

தன்னிடம் காதலியுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாக அவர் ஆதாரங்களைக் காட்டியதும், இரு குடும்பத்தாருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

விவகாரம் முற்றி போலீஸ் நிலையம் வரை சென்றது. நள்ளிரவு 2 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில், அந்த வாலிபர் அப்பெண்ணுடன் தான் வாழ்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

மணப்பெண்ணின் கடந்த கால உறவை மறைத்துத் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த மணமகன், “இனி இவள் எனக்கு வேண்டாம், இவளுடன் என்னால் வாழ முடியாது” எனத் திட்டவட்டமாகக் கூறி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

இதையடுத்து மணப்பெண் தனது பெற்றோருடன் கிளம்பிச் சென்றார். காதலனின் இந்தத் திடீர் என்ட்ரியால் ஒரு கல்யாண வீடே ரணகளமாகிப் போனது அப்பகுதியில் பெரும் பேச்சாக உள்ளது.