இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான சூர்யகுமார் யாதவ் தந்தையாகியுள்ளார். அவருக்கு திருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகு  பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு இனிப்பு வழங்கி அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது மனைவி தேவிஷா ஷெட்டி தம்பதியினருக்கு கடந்த மே 7-ஆம் தேதி (7-5-2026) பெண் குழந்தை பிறந்தது. தங்களது முதல் குழந்தைக்கு ‘ரிதிமா’ என்று அவர்கள் பெயரிட்டுள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இவர்களது இல்லத்திற்குப் புதிய வரவு வந்துள்ளது.

தற்போது ஐபிஎல் 2026 தொடர் நடைபெற்று வரும் நிலையில், தனது மகளின் பிறப்பிற்காக மும்பையில் தங்கியிருந்த சூர்யகுமார், இன்று ராய்ப்பூரில் நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி போட்டியில் பங்கேற்பதற்காக மும்பை விமான நிலையம் வந்தார்.

அப்போது அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் மற்றும் செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யகுமார், அனைவருக்கும் இனிப்புப் பெட்டிகளை வழங்கினார். “இதை எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அனைவரும் சாப்பிடுங்கள்” என மகிழ்ச்சியுடன் அவர் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கேப்டன் சூர்யகுமாருக்கு கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.