தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே உள்ள பழைய திட்டங்கள் தொடரும் என்றும் அதுபோக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். குறிப்பாக எல் நினோவால் 12 மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இந்த ஆண்டு உருவாகியுள்ள ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வின் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் 12 மாவட்டங்கள் இதன் பிடியில் அதிகளவில் சிக்கும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தால் பயிர் சாகுபடி மற்றும் விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் பிரத்யேக மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள விவசாய நிலங்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்து ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள அரசு முழுவீச்சில் களமிறங்கியுள்ளது.

முன்னதாக, 2026-2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் வரவிருக்கும் இந்த கடுமையான வறட்சிச் சூழலையும், ‘சூப்பர் எல் நினோ’ தாக்கத்தையும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு ரூ. 340 கோடியை அதிரடியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இயற்கை இடர்ப்பாடுகளால் விவசாயிகள் எவ்வித நஷ்டத்தையும் சந்திக்கக் கூடாது என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன், இந்த நிதித் தொகையானது உரிய பாதுகாப்பு மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடி பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.