ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற காஜா மொய்னுதீன் ஹசன் சிஷ்டி தர்காவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அங்குள்ள பெரிய பிரசாத அண்டாவிற்குள் (Cauldron) வாலிபர் ஒருவர் திடீரென குதித்து, உள்ளே பக்தர்கள் காணிக்கையாகப் போட்டிருந்த ரூபாய் நோட்டுகளை அள்ளித் தனது பையில் திணித்துள்ளார்.

தர்காவின் மரபுப்படி இந்த அண்டாவில் சமைக்கப்படும் உணவில் பக்தர்கள் காணிக்கை போடுவது வழக்கம். அந்த வாலிபர் அண்டாவிற்குள் இறங்கிப் பணத்தை எடுப்பதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை வெளியே வரும்படி சத்தமிட்டனர்.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது திட்டமிட்டே திருட முயன்றாரா என்பது குறித்து தர்கா நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புனிதமான இடத்தில் நடந்த இந்த அத்துமீறல் தர்காவிற்கு வந்திருந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.