கிரிக்கெட் உலகின் சகாப்தமாக உருவெடுத்த சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால ஆட்டங்கள், காஷ்மீரி வில்லோ மரத்தால் செய்யப்பட்ட மட்டையுடனேயே தொடங்கியது. அவருடைய சகோதரி அன்போடு பரிசளித்த அந்த முதல் மட்டையைக் கொண்டுதான் சர்வதேசப் போட்டிகளில் சதம் மேல் சதம் அடித்து சச்சின் பல சாதனைகளைப் படைத்தார். ஆனால், சச்சின் போன்ற பல முன்னணி வீரர்களை உருவாக்கிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காஷ்மீர் மட்டை தயாரிப்புத் தொழில், தற்போது கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
காஷ்மீரில் வளரும் ‘சலிக்ஸ் ஆல்பா’ என்ற சிறப்புமிக்க மரங்களில் இருந்தே உலகப் புகழ்பெற்ற இந்த மட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் கிரிக்கெட் நட்சத்திரங்களும் இந்த மட்டைகளைப் பயன்படுத்தி விளையாடியுள்ளனர். ஆனால், சமீபகாலமாக மட்டை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், இந்த மரங்களுக்கான தேவையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
அளவுக்கு அதிகமான தேவை காரணமாக, சிறிய மற்றும் இளம் மரங்கள் கூட வெட்டப்பட்டு அழிக்கப்படுகின்றன. மேலும், வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாகப் புதிய மரங்களை நட்டு வளர்ப்பதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சுமார் 50 சதவீதம் வரை மூலப்பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு, மட்டை தயாரிப்பு நிறுவனங்கள் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றன.
கிரிக்கெட் உலகில் அதிக விலை கொண்ட இங்கிலீஷ் வில்லோ மட்டைகளுக்கு மாற்றாக, மிகக் குறைந்த விலையில் தரமான மட்டைகளை வழங்கி வந்ததே இந்த காஷ்மீரி வில்லோ தொழில்தான். ஆனால், இந்த அரிய வகை மரங்கள் ஒட்டுப்பலகை போன்ற பிற பயன்பாடுகளுக்காகச் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுக் கடத்தப்படுவதும், இந்தத் தொழிலுக்கு மேலும் பெரிய முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் பயணத்தின் நினைவாக, சமீபத்தில் காஷ்மீரில் உள்ள மட்டை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். சச்சினின் சாதனைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்ட காஷ்மீரின் பாரம்பரிய மட்டை தயாரிப்புத் தொழில், அரசு மற்றும் அதிகாரிகளின் உரியப் பாதுகாப்பு நடவடிக்கை இல்லையெனில் முற்றிலும் அழியும் அபாயத்தில் உள்ளது.
