தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. நான்கு முனைப் போட்டியால் தமிழக அரசியலில் யாருடைய கை ஓங்கும்? என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவியது. தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் வாக்குகள், யாருடைய வெற்றியைப் பாதிக்கும் என்பது அரசியல் விமர்சகர்களிடையே பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக மின்னணு எந்திரங்கள் 234 அறைகளில் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் எண்ண 240 தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக 10,545 பணியாளர்கள் மற்றும் 4,624 நுண் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீசாரும், 40-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். முறைகேடுகளைத் தவிர்க்க, இந்த முறை முதன்முறையாக ‘கி.யூ.ஆர். கோடு’ (QR Code) கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஸ்கேன் செய்த பிறகே ஊழியர்கள் மற்றும் முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து 8:30 மணிக்கு மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிவுகளும் அந்தந்த மையங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுவதோடு, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் முடிவுகளை results.cci.gov.in என்ற இணையதளத்திலும் பார்த்து கொள்ளலாம்.
