தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் பலத்த கன மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதோடு மீட்பு குழுவினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழந்ததாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது. அதன்படி ஏழாவது மலையில் காரைக்காலைச் சேர்ந்த ஒரு கௌசல்யா என்ற பெண் உயிரிழந்த நிலையில், ஐந்தாவது மலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்ற 32 வயது நபர் உயிரிழந்துள்ளார். இந்த வருடத்தில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே வெள்ளியங்கிரி மலைக்கு இதய பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றோர் ஏற வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் தற்போது இரண்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளதால் இது தொடர்பாக வனத்துறையினரும் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வரும் நிலையில் மறு அறிவிப்பு வரும் வரையில் மலை ஏறக்கூடாது என பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
