பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் படிப்பாதையில், தனது மனைவியை கையில் தூக்கிக் கொண்டு வாலிபர் ஒருவர் ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாடல் பின்னணியில் ஒலிக்க, சக பக்தர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் எதையும் பொருட்படுத்தாமல் அவர் செய்த இந்தச் செயல், ஆன்மீகத் தலத்தின் புனிதத்தன்மையைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தும், அதனை மீறி இத்தகைய செயலில் ஈடுபட்டது கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும், ஏற்கனவே திருச்செந்தூர் முருகன் கோவிலில் இது போன்று ரீல்ஸ் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தற்போது இன்ஸ்டாகிராமில் ‘சுகன்யா’ என்ற பெயரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை எடுத்தவர்கள் யார் என்பது குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புனிதமான மலைக்கோவிலில் இத்தகைய கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
