ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகள் இடையே நீடித்து வரும் ராணுவ மோதல்கள், வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத சரிவை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, எரிசக்தி ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ள நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ‘கோல்ட்மேன் சாக்ஸ்’ (Goldman Sachs) நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் ஃபரூக் சூசா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் போக்குவரத்து இரண்டு மாதங்களுக்குத் தடைபட்டால், கத்தார் மற்றும் குவைத் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இந்த ஆண்டு 14 சதவீதம் வரை சுருங்கக்கூடும். இது 1990-களில் ஈராக் – குவைத் போரின்போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு நிகரான பாதிப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியைச் சார்ந்து இருக்காமல், மாற்றுப் பாதைகள் மூலம் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் வசதி கொண்டதால், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஓரளவுக்குப் பாதிப்பிலிருந்து தப்பிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சவுதி அரேபியாவின் ஜிடிபி 3 சதவீதமும், அமீரகத்தின் ஜிடிபி 5 சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது. இது 2020-ஆம் ஆண்டு நிலவிய கோவிட்-19 பாதிப்பை விட மோசமானதாக இருக்கும்.
உலகின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. தற்போது நிலவும் போக்குவரத்துத் தடையால், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 103 டாலரைத் தாண்டியுள்ளது.
அதேநேரத்தில் சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டுத் துறைகளும் அரசியல் ஸ்திரமற்ற சூழலால் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஹ்ரைனில் உள்ள உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலை, விநியோகத் தட்டுப்பாட்டால் உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியுள்ளது. கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி கடுமையாகச் சரிந்துள்ளது.
சவுதி அரேபியா தனது வான்பரப்பையும் வணிகத்தையும் ஓரளவுக்குத் தற்காத்துக் கொண்டாலும், கச்சா எண்ணெய் வருவாய் ஏற்ற இறக்கத்தால் அந்நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும். எனினும், எண்ணெய் விலை உயர்வாகவே நீடித்தால், இந்த நிதியாண்டு இறுதியில் பற்றாக்குறை 1 சதவீதம் வரை குறையவும் வாய்ப்புள்ளது. மேலும் பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த மோதல் நீண்ட காலத்திற்கு நீடித்தால், வளைகுடா நாடுகள் தங்கள் நிதித் தேவைகளுக்காகக் கடன் சந்தைகளை நாட வேண்டிய சூழல் உருவாகும்.
