ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த சில வாரங்களுக்குத் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அடுத்த இருபத்தியோரு நாட்களில் ஈரானின் ஆயிரம் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ள நிலையில் இதற்காக சுமார் 827 மில்லியன் டாலர் அவசரக்கால போர் நிதிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கும் பாதுகாப்புத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் வசம் ஏவுகணைகளை இடைமறிக்கும் தளவாடங்கள் பற்றாக்குறை இருப்பதாக வெளியான தகவல்களை அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கிதியோன் சார் மறுத்துள்ளார்.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் வலுவாக உள்ளதாகவும் ஈரான் ஏவிய ஏவுகணைகளைத் தங்களது படை வெற்றிகரமாக முறியடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மறுபுறம் ஈரானும் இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஹைஃபா போன்ற இடங்களை இலக்காகக் கொண்டு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த மோதலில் ஈரானில் பள்ளி மாணவிகள் உட்பட 1300ம் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பில் பன்னிரண்டு பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கத்தார் மற்றும் குவைத் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் ஈரான் தாக்கியுள்ளதால் போர் சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது.
குறிப்பாக உலக நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் சர்வதேச அளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த வழித்தடம் முடங்கியுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
