மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், “ஈரான் தற்போதைக்கு மறுப்பு தெரிவித்தாலும், இறுதியில் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தே தீர வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ‘ஏர்ஃபோர்ஸ் ஒன்’-இல் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் இன்னும் தயாராகவில்லை. ஆனால், அவர்கள் எங்களுடன் பேசத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களால் ஈரானின் ட்ரோன் தொழிற்சாலைகள் மற்றும் ராணுவத் தளங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. அவர்களின் ராணுவ பலம் முன்பை விட இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், போர் இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்று கூற முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, ஈரானுக்கு எதிரான அழுத்தத்தை அமெரிக்கா மேலும் அதிகரிக்க வேண்டும் என்று சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், “ஈரானின் ராணுவத் திறனை முற்றிலும் முடக்க வேண்டும் என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானை தனது பிராந்திய எதிரியாகக் கருதும் சவுதி அரேபியா, “பாம்பின் தலையை நசுக்க வேண்டும்” என்ற தனது பழைய கொள்கையில் இப்போதும் உறுதியாக இருப்பதை இது காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இந்த கடல்வழிப் பாதையைப் பாதுகாப்பதில் மற்ற நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நேட்டோ அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் டிரம்ப் சாடியுள்ளார்.

அமெரிக்காவின் வாதங்களை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்சி முற்றிலுமாக நிராகரித்துள்ளார். “நாங்கள் போர் நிறுத்தத்தையோ அல்லது பேச்சுவார்த்தையையோ கோரவில்லை. அமெரிக்காவின் சட்டவிரோதப் போருக்கு எதிராக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் போராடத் தயார்” என்று அவர் கூறியுள்ளார். மேலும், தெஹ்ரானில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது ஒரு ‘சுற்றுச்சூழல் குற்றம்’ (Ecocide) என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மறுபுறம், ஈரானின் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.