மகாராஷ்டிரா பன்வெல் பகுதியில் கோழிகளை திருடுவதற்காக கிராமத்திற்குள் புகுந்த 3 பேரை தடுக்க முயற்சி செய்த உரிமையாளரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதையடுத்து இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி காவல்துறையினர் கூறியதாவது “மார்ச் 29ம் தேதி இரவு 3 கோழி திருடர்கள் ஷிவ்கர் கிராமத்துக்குள் நுழைந்து இருக்கின்றனர். அப்போது வினய் பாட்டீல்(19) என்பவர் சத்தம் கேட்டு வெளியில் வந்துள்ளார். அதன்பின் திருடர்களுக்கும் அவருக்கும் இடையில் கைகலப்பானது.

இந்நிலையில் வினய் பாட்டீல் வீட்டிலிருந்த கோடாரியை எடுத்துக்கொண்டு அவர்களை துரத்திக்கொண்டு ஓடினார். கிராமத்துக்கு வெளிப்புறம் சென்றவுடன் திருடர்கள் ஒன்று சேர்ந்து வினய் பாட்டீலை தாக்க துவங்கினர். அவரிடமிருந்த கோடாரியை பிடிங்கி அவரை சரமாரியாக வெட்டினர். இதனால் படுகாயமடைந்த வினய் பாட்டீல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

பின் இவரை மீட்டு கிராம மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 30ம் தேதி இறந்தார். பன்வெல் பகுதியிலுள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வரும் 3 பேர் இரவில் கோழிகளை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். உடனே அவர்கள் 3 பேரையும் கைது செய்ததோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருக்கிறோம்” என தெரிவித்தனர்.