எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் சிறார் ஆபாசப் படங்கள், போலி ஆபாசப் படங்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் பரப்பப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், பிரான்ஸ் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகத்தின் இணையக் குற்றப்பிரிவு இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இது குறிப்பாக, எக்ஸ் தளத்தின் ‘க்ரோக்’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகப் பல இலட்சக்கணக்கான ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்டதாகவும், அதில் சிறார்களின் உருவங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் எலான் மஸ்க் மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ லிண்டா யாக்காரினோ ஆகியோரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பிரான்ஸ் அதிகாரிகள் கோரியுள்ளனர். முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் பாரிஸில் உள்ள எக்ஸ் நிறுவன அலுவலகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இருப்பினும், இந்த விசாரணையானது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அமெரிக்க நிறுவனங்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும் எலான் மஸ்க் தரப்பு சாடியுள்ளது. அமெரிக்க நீதித்துறையும் இந்த விவகாரத்தில் பிரான்ஸிற்கு உதவ மறுத்துள்ள நிலையில், சர்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டுப்பாடு குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.