கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், ஒரு பெருங்கூட்டம் நடிகர் விஜய் முதலமைச்சராக வர வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்தார்.
தவெக ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலைப் பெற்றுத்தான் ஆதரவு அளித்தோம் என்று விளக்கிய அவர், அதிமுக ஆதரவுடன் திருமாவளவனையோ அல்லது எடப்பாடி பழனிசாமியையோ முதலமைச்சராக்க திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டதால் தான் தவெகவுக்கு ஆதரவு அளிக்கத் தங்களுக்குத் தாமதம் ஏற்பட்டது என்றார்.
மேலும், கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களிடம் இருந்த அதிருப்தி குறித்து தாங்கள் திமுக தலைமைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது குதிரை பேரம் இல்லை என்றும், அது அதிமுகவை உடைப்பது போல் தெரியவில்லை என்றும் கூறினார்.
மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பதையும், திமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்தும் வருகிற 20-ஆம் தேதி நடக்கும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
