தமிழக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தற்போதைய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் வாக்குறுதி அளிக்கும்போது வராத ‘ரிசர்வ் வங்கி விதிமுறைகள்’, ஆட்சிக்கு வந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நிலை வரும்போது மட்டும் எங்கிருந்து வருகின்றன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் கடந்த 2025 நவம்பர் 28 அன்றே வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அதை முழுமையாகத் தெரிந்து கொண்டுதான் கடந்த ஏப்ரல் மாதம் தவெக தனது தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்தது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளைத் திட்டமிட்டு ஏமாற்றும் வேலை என்று தங்கம் தென்னரசு சாடியுள்ளார். எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில் அரைகுறையாகப் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்திருப்பது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எனவே, தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, இந்த அரசின் முதல் பட்ஜெட்டிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யும் முறையான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.