தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தின் தற்போதைய தவெக ஆட்சி நிர்வாகத்தைக் கடுமையாக விமரிசித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை நிலவி வருவதாகவும், சென்னை மற்றும் மதுரையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்லப் பேருந்துகள் இல்லாமல் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தினந்தோறும் நடக்கும் படுகொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் இளைஞர்களின் போதை வன்முறையால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, தமிழகம் முழுவதும் அச்சமும் ஆபத்தும் நிறைந்த சூழல் உருவாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுவதாகவும், அமைச்சர்கள் பக்குவமின்றிப் பேசுவதை மக்கள் விரக்தியோடு பார்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்களில் ஒரு கதாபாத்திரத்திற்குப் பதிலாக மற்றொருவர் மாறுவதைப் போல, தமிழகத்தில் திமுகவுக்குப் பதிலாக தவெக வந்துள்ளதே தவிர, காட்சிகள் எதுவும் மாறவில்லை என்று எச்.ராஜா ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

திமுக ஆட்சியில் நடந்த அவலங்கள் தவெக ஆட்சியிலும் அலங்கோலங்களாகத் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது மாற்றமல்ல, மிகப்பெரிய ஏமாற்றம் என்று தனது பதிவில் மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.