கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவுகள் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பாக, வாக்கு எண்ணிக்கைக்குப் பின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 5 சதவீத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மைக்ரோ கண்ட்ரோலர்களைச் சரிபார்ப்பது தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்தின் நிலையான இயக்க நடைமுறையை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, ஒரு முக்கியமான நடைமுறைத் பிழையைக் சுட்டிக்காட்டியது. அதாவது, மு.க.ஸ்டாலின் தரப்பினர் நடைமுறையில் உள்ள திருத்தப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதலுக்குப் பதிலாக, பழைய 2024-ஆம் ஆண்டு வழிகாட்டுதலை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தது விசாரணையின் போது தெரியவந்தது.

நீதிமன்றத்தின் இந்தச் சுட்டிக்காட்டுதலைத் தொடர்ந்து, பழைய மனுவை வாபஸ் பெற்றுவிட்டு, புதிய 2025-ஆம் ஆண்டு தேர்தல் ஆணைய நடைமுறையை எதிர்த்துப் புதிய ரிட் மனுவைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நீதிமன்றத்தில் இந்தத் தவற்றின் காரணமாக மனுவைத் திரும்பப் பெற நேர்ந்தது திமுக கட்சியின் சட்டப் பிரிவினருக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

“>

 

தேர்தல் தோல்விக்குப் பின் சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ள மு.க.ஸ்டாலின் தரப்பு, அடுத்தடுத்து எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.