கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி ஈரண்ணா படிகர். சமூக வலைதளங்களை எப்படித் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று யோசித்த இவர், இன்ஸ்டாகிராமில் ஒரு போலி கணக்கைத் தொடங்கினார். அதில் தான் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேலை பார்ப்பதாகக் கூறி பதிவுகளை வெளியிட்டார்.

“இஸ்ரோவில் அரசு வேலை வேண்டுமா? என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்ற இவரது விளம்பரத்தைப் பார்த்த கதக், விஜயாப்புரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களும், இளம்பெண்களும் இவரைத் தொடர்பு கொண்டனர். அவர்களிடம் பேசிய ஈரண்ணா, தான் நினைத்தால் மிக எளிதில் இஸ்ரோவில் வேலை வாங்கித் தர முடியும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினார். இதை நம்பிய வாலிபர்களிடம் இருந்து போன்-பே  செயலி மூலம் பல லட்சம் ரூபாயை சுருட்டினார். பணத்தை வாங்கியதுடன் தனது கைவரிசையைக் காட்டிய அவர், முப்பதுக்கும் மேற்பட்ட இளம்பெண்களைத் தனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து  ஏமாற்றியுள்ள அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் வெளியானது.

நாட்கள் பல கடந்தும் வேலை வாங்கித் தராததால், பணம் கொடுத்த இளைஞர்கள் ஈரண்ணாவிடம் தீவிரமாக முறையிடத் தொடங்கினர். நெருக்கடி முற்றியதும் தன் மீதான புகார்களைத் தவிர்க்க நினைத்த ஈரண்ணா, உடனடியாகத் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முழுமையாக அழித்துவிட்டு, செல்போன் எண்களையும் மாற்றினார். அப்போதுதான் தாங்கள் மிகப்பெரிய ஏமாற்றுக்காரரிடம் சிக்கித் தவிப்பதை உணர்ந்த பாதிக்கப்பட்ட வாலிபர்களும், இளம்பெண்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி விஜயாப்புராவில் உள்ள அவரது வீட்டிலேயே ஈரண்ணாவைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஏற்கனவே பலரிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காகவே இந்த விபரீத மோசடியில் இறங்கியது தெரியவந்தது.

அவரது செல்போனை ஆய்வு செய்த காவல்துறைக்கு மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் காத்திருந்தன. போனில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்ததைக் கண்டறிந்த போலீசார், அவரது வீட்டில் சோதனையிட்டு ஏராளமான ஆணுறைகளையும் பறிமுதல் செய்தனர். கைதான ஈரண்ணாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் கர்நாடகப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.