தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய இரண்டே வருடத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தவர் விஜய். தமிழகத்தின் முதல்வராக தளபதி விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொதுக் குழு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சில  அமைச்சர்கள் இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் என விஜயை புகழ்ந்து வருகிறார்கள். இது தொடர்பாக வெளியான ஒரு கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் பிரதமருக்கான ஆதரவு பட்டியலில் ஒன்பது சதவீதங்களுடன் விஜய் இருப்பது வெளிவந்துள்ளது.

இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் எனவும் இதனை கண்டிப்பாக தமிழக வெற்றிக்கழகம் ஏற்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறுவோம் என்றும் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இருப்பினும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் முதல்வர் விஜயை பிரதமர் வேட்பாளர் என்று கூறுவதில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்த நிலையில் இன்று சேலத்திற்கு மேட்டூர் அணையை திறப்பதற்காக முதல்வர் விஜய் செல்லும் நிலையில் அவரை வரவேற்பதற்காக அமைச்சர்கள் புகைப்படத்துடன் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் முதல்வர் விஜய் பாராளுமன்றத்திற்கு முன் நிற்பது போன்றும் அதில் இன்றைய முதல்வர் நாளைய பிரதமரே வருக வருக என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த பேனரில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் புகைப்படங்களும் அவர்களது பெயர்களும் இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பான போட்டோ தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.