மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ‘லவ் ட்ரையாங்கிள்’ மோதலால் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நகரையுமே அதிர வைத்துள்ளது.
போபாலில் உள்ள ஒரு ஹோட்டலில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண் ரிசப்ஷனிஸ்ட்டை, அங்கேயே முன்பு வேலை பார்த்த வினிதா ராஜ்புத் என்ற பெண் கடத்திச் சென்று, தனது கூட்டாளிகளை வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஹோட்டல் உரிமையாளருடன் தனக்கு இருந்த நெருக்கமான உறவில், இந்தப் புதுப் பெண் இடையூறாக இருப்பாரோ என்ற சந்தேகத்திலும், ஆத்திரத்திலுமே வினிதா இந்த பயங்கரச் சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளார். இதற்காகத் தனது இரண்டு கூட்டாளிகளை ஹோட்டல் அறைக்கு அனுப்பி, அந்தப் பெண்ணைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துத் துன்புறுத்தியுள்ளார்.
சம்பவம் நடந்த ஏப்ரல் 24-ம் தேதி, ஹோட்டல் அறைக்குள் நுழைந்த வினிதா, பாதிக்கப்பட்ட பெண்ணைக் கடுமையாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவரை வலுக்கட்டாயமாக ஸ்கூட்டரில் ஏற்றி குவாலியருக்குக் கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.
ஹோட்டலில் நடந்த தகராறு குறித்து போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைக்க, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தனர். பின்னர் செல்போன் சிக்னல்களை வைத்துத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார், பஜாரியா பகுதியில் பதுங்கியிருந்த வினிதாவை அதிரடியாகக் கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர்.
“அவள் எப்படி என் இடத்தை எடுக்கலாம்?” என்ற வன்மத்தில் ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணுக்கு இழைத்த இந்த அநீதி போபால் மக்களை உறைய வைத்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
