அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சைன்சா கிராமத்தில், வெறும் 100 ரூபாய்க்காக 11 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் யாருக்கும் தெரியாமல் 100 ரூபாயை எடுத்த சிறுவனை அவனது தாய் கண்டித்ததோடு, இது குறித்து தந்தை வந்தவுடன் அவரிடம் சொல்லப்போவதாகக் கூறியுள்ளார். தந்தையின் கண்டிப்புக்கு பயந்த அந்த சிறுவன், யாருமில்லாத நேரத்தில் வீட்டின் மாடி அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து மகனைத் தேடிச் சென்ற தாய், அவன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியது இதயத்தை உருக்குவதாக இருந்தது.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். 11 வயதிலேயே விபரீத முடிவெடுத்த சிறுவனின் இந்தச் செயல், இன்றைய தலைமுறை குழந்தைகளின் மன உறுதி மற்றும் பெற்றோரின் கண்டிப்பு முறை குறித்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரு சிறு தொகைக்காகப் பிஞ்சு உயிர் பறிபோனது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
