நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சாணார்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். இந்தக் கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் தங்கள் கட்சிக் கொடிகளை ஏந்தி அவரை வரவேற்றனர். இதனிடையே, தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்கள் சிலரும் தங்கள் கொடியை ஏந்தி கூட்டத்தில் நின்றனர். இது கூட்டத்தில் இருந்தவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி தனது உரையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் கூட்டணி வலிமையை விமர்சித்தார். “திமுகவின் கூட்டணி வெறும் பேச்சு, ஆனால் நமது கூட்டணி வெற்றிகரமானது. இதோ பாருங்கள், தவெக கொடி பறக்கிறது, பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது!” என்று சிரித்தபடி கூறினார். இதைக் கேட்டு கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைக்கும் கனவு பொய்யாகும் என்றும், கரூரில் நடந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

கரூர் சம்பவம் குறித்து பேசிய எடப்பாடி, அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகக் கூறப்படுவதை சுட்டிக்காட்டினார். “காவல்துறை விசாரணையால் உண்மை வெளிவராது. சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே இந்தச் சம்பவத்தின் பின்னணி தெரியவரும்” என்று கூறினார். முன்னதாக, தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பிரசாரத்திலும் தவெக தொண்டர்கள் தங்கள் கொடியை ஏந்தி எடப்பாடியை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.