இலங்கையின் தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் ‘இந்தியா ஏ’ மற்றும் ‘இலங்கை ஏ’ அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான ஆட்டத்தில், சூப்பர் ஓவர் முடிவில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, மைதானத்திலேயே இருநாட்டு வீரர்களுக்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற சூப்பர் ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது இரண்டாவது தொடர் தோல்வியைப் பதிவு செய்தது. இந்த ஆட்டத்தின் போது 15 வயதே ஆன இந்திய இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி பேட்டிங் செய்ததில் இருந்தே இலங்கை பந்துவீச்சாளர்கள் அவரிடம் தொடர்ந்து வம்பு இழுத்து (Sledging) மோசமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

போட்டி முடிந்ததும், இலங்கை வீரர்கள் ஓவர் டோஸாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட, ஆத்திரமடைந்த வைபவ் சூரியவன்ஷி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதுலன் மற்றும் விஷென் ஹலம்பகே ஆகியோரை நோக்கி கோபமாகப் பாய்ந்து, ஒரு வீரரை ஆக்ரோஷமாக முட்டித் தள்ளிய காட்சிகள் டிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகின்றன.

மூத்த இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெல்லா உடனடியாகக் குறுக்கே புகுந்து இருதரப்பையும் தடுத்து நிறுத்தியதால் நிலைமை கட்டுக்குள் வந்தது. முன்னதாக, சூப்பர் ஓவர் விதிகுறித்து நடுவர்களிடம் இந்திய கேப்டன் திலக் வர்மா காரசாரமாக விவாதித்ததும், தற்பொழுது இந்த கைகலப்பு விவகாரத்தில் மேட்ச் ரெப்ரி பிரதீப் ஜெயபிரகாஷ் வீரர்களுக்கு அபராதம் விதிப்பாரா அல்லது எச்சரிக்கையுடன் விடுவாரா என்ற பரபரப்புத் தகவல்கள் சோசியல் மீடியா ஏரியாக்களில் காட்டுத்தீயாய் பரவி கிரிக்கெட் வட்டாரத்தில் செம விவாதத்தைக் கிளப்பியுள்ளது.