இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே எப்போதும் எதிர்பார்ப்பு விண்ணைத் தொடும். இந்நிலையில், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூன்று அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது பாகிஸ்தான் வாரியத்தின் முதல் கோரிக்கையாக வருவாய் விவகாரம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஐசிசி-யின் மொத்த வருவாயில் பாகிஸ்தான் வாரியத்திற்கு வழங்கப்படும் பங்கினை கணிசமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது இரண்டாவது முக்கிய நிபந்தனையாகும். அரசியல் காரணங்களால் பல ஆண்டுகளாக இரு நாடுகளும் பொதுவான தொடர்களில் மட்டுமே மோதி வரும் நிலையில், இக்கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு விசித்திரமான கோரிக்கையை பாகிஸ்தான் முன்வைத்துள்ளது. மைதானத்தில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே சுமூகமான உறவை வெளிப்படுத்தும் வகையில், போட்டியின் போது வீரர்கள் பரஸ்பரம் கைகுலுக்குவதைக் கட்டாயமாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிபந்தனைகள் குறித்து ஐசிசி மற்றும் பிசிசிஐ (BCCI) இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை. பாகிஸ்தானின் இந்த ‘பிடிவாதம்’ உலகக் கோப்பைத் தொடரின் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.
