2026 டி20 உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளது. ஒருகட்டத்தில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டம் இந்தியாவைக் காப்பாற்றியது. இந்தப் போட்டியில் இந்தியாவை மிரட்டியது வேறு யாருமல்ல, ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ஹர்மீத் சிங் தான். மும்பையில் பிறந்து, 2012-ல் இந்தியாவுக்காக அண்டர்-19 உலகக்கோப்பையை வென்று கொடுத்த இவர், இன்று அமெரிக்க அணிக்காக விளையாடி ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் என முக்கிய விக்கெட்டுகளைத் தூக்கி இந்திய ரசிகர்களுக்கே ‘ஷாக்’ கொடுத்துள்ளார்.

​ஹர்மீத் சிங்கின் இந்த எழுச்சிக்கு பின்னால் பல திக் திக் திருப்பங்கள் உள்ளன. 2013 ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் வழக்கில் சிக்கி விசாரணையை எதிர்கொண்டது முதல், மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது வரை பல சர்ச்சைகள் இவரைச் சூழ்ந்திருந்தன. அந்தச் சரிவுகளில் இருந்து மீள முடியாமல் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த இவர், இன்று அந்த நாட்டின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார். பழைய கசப்பான சம்பவங்களை மறந்து இன்று ஒரு சாதனையாளராக அவர் விஸ்வரூபம் எடுத்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “அன்று இந்தியாவின் நம்பிக்கை, இன்று அமெரிக்காவின் பலம்” என ஹர்மீத் சிங்கின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.