இந்திய ரயில்வேயில் தினந்தோறும் விதவிதமான வினோதங்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் காய்ந்த மாட்டுச் சாணத்தை (வரட்டியை) ஒரு கூடையில் சுமந்துகொண்டு, ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் சமையல் எரிபொருளாகப் பயன்படுத்துமாறு கூறி விற்பனை செய்ய முயற்சி செய்கிறார். சாதாரணமாக டீ, காபி விற்கும் இடத்தில், யாரும் எதிர்பாராத விதமாக மாட்டுச் சாணம் விற்பனை செய்யப்படுவது பயணிகளை ஒரு நிமிடம் திகைக்க வைத்துள்ளது.

​இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் பாரம்பரிய எரிபொருளுக்கு மாறுகிறார்களா அல்லது இது வெறும் கவனத்தை ஈர்க்கும் செயலா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம், ரயிலுக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விற்பனை செய்வது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், இது போன்ற செயல்கள் ஆபத்தானவை எனவும் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.