
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கேள்வி கேட்டால் அப்படித்தான் வாங்குவோம் இஷ்டம் இருந்தால் வாங்கு இல்லாவிட்டால் போ என்று டாஸ்மாக் ஊழியர்கள் பதிலளித்து வந்தனர். இதற்கிடையில் மதுவிலக்கு துறைக்கு புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை அதன் விலைக்கு மேலே ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும் அமைச்சரின் உத்தரவை பெரும்பாலான டாஸ்மாக் ஊழியர்கள் மதிக்கவில்லை. கேள்வி கேட்டால் தொடர்ந்து தாக்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
இந்த நிலையில் திருவாரூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் மதுபிரியர் மது வாங்கியுள்ளார். அப்பொழுது வழக்கம்போல பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. அப்போது எதற்காக பத்து ரூபாய் என்று கேள்வி கேட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் இரண்டு ரூபாய் டாஸ்மாக் ஊழியர் திருப்பி கொடுத்துள்ளார். அதாவது பத்து ரூபாய்க்கு பதிலாக எட்டு ரூபாயை எடுத்துக் கொள்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இப்படி யாராவது கேள்வி கேட்டால் 8 ரூபாயும் கேள்வி கேட்காதவரிடம் பத்து ரூபாயும் வசூலிக்கும் புது டெக்னிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் பின்பற்றி வருவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.