கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஸ்ரீநந்தா, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது மாயமான நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முல்லையன்கிரி மற்றும் சந்திரதிரிகோண மலைப்பகுதிகளைச் சுற்றிப் பார்த்தபோது, மாணிக்கத்தாரா அருவி அருகே அவர் திடீரென மாயமானார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் கடந்த நான்கு நாட்களாகத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், டிரோன் உதவியுடன் தேடியபோது சுமார் 2,000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் ஸ்ரீநந்தா பிணமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.
மேலும் மீட்புக்குழுவினர் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி மாணவியின் உடலை மீட்டனர். சிறுமி செல்பி எடுக்கும்போது தவறி விழுந்தாரா அல்லது அவரது மரணத்திற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
