ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பாகிஸ்தான் வருகை தந்துள்ளனர்.

அதேபோல், அமெரிக்கப் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி முதல் இரண்டு வார கால போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மிகக்கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இதுவரை பயன்படுத்தப்படாத அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் அமெரிக்கக் கப்பல்கள் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் முன்னெப்போதும் இல்லாத அளவிலான தீவிர தாக்குதலை ஈரான் எதிர்கொள்ள நேரிடும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.